நவீன மயமாக்கப்பட்ட
நகர வீதியின்
பூர்வகுடிகள்
மழை பெய்து விட்டால்
வானத்தின்
கருமேகங்கள் எல்லாம்
வந்துவிடும் வீதிகளில்
சாயம் வெளுத்துப் போகும்
சில முகங்களைப் போல
சமூகப் பொறுப்பு என
சில கைகள் ஓடிவரும்
அடிக்கடி
நிரந்தரத் தீர்வை
நினைத்துப் பார்த்திராத
சகுனியின் பகடையாய்
சில பாசிச கைகள்
பற்றவும் வைக்கும்
சில சோசலிச கைகள்
குரல் கொடுக்கவும் செய்யும்
சில நேரங்களில்
கட்டவும் வைக்கும்
அதிகார விளையாட்டில்
அஸ்திவாரமில்லா கூடாரம்
அவ்வப்போது…
கூத்து முடிந்ததும்
கலைக்கப்படும்
மன்னர் வேடம்
அருங்காட்சியகம் செல்லாத
ஆதிவாசிகள்
சிந்தித்து விடக்கூடாதென
அடிக்கடி வந்து
சந்திக்கிறது
கட்சியும் காக்கிச் சட்டையும்
அரசியல் செய்ய
எங்கள் வாழ்வு
சிலருக்கு அவசியமாகிறது
விடியலுக்காய் காத்திருக்கும்
விரக்தி அடைந்த கூட்டம்
குடிசை வாசிகள்.
No comments:
Post a Comment