Saturday, January 21, 2023

குடிசை வாசிகள்

 

நவீன மயமாக்கப்பட்ட

நகர வீதியின்

பூர்வகுடிகள்

மழை பெய்து விட்டால்

வானத்தின்

கருமேகங்கள் எல்லாம்

வந்துவிடும் வீதிகளில்

 

சாயம் வெளுத்துப் போகும்

சில முகங்களைப் போல

சமூகப் பொறுப்பு என

சில கைகள் ஓடிவரும்

அடிக்கடி

 

நிரந்தரத் தீர்வை

நினைத்துப் பார்த்திராத

சகுனியின் பகடையாய்

சில பாசிச கைகள்

பற்றவும் வைக்கும்

சில சோசலிச கைகள்

குரல் கொடுக்கவும் செய்யும்

 

சில நேரங்களில்

கட்டவும் வைக்கும்

அதிகார விளையாட்டில்

அஸ்திவாரமில்லா கூடாரம்

அவ்வப்போது

 

கூத்து முடிந்ததும்

கலைக்கப்படும்

மன்னர் வேடம்

அருங்காட்சியகம் செல்லாத

ஆதிவாசிகள்

 

சிந்தித்து விடக்கூடாதென

அடிக்கடி வந்து

சந்திக்கிறது

கட்சியும் காக்கிச் சட்டையும்

 

அரசியல் செய்ய

எங்கள் வாழ்வு

சிலருக்கு அவசியமாகிறது

விடியலுக்காய் காத்திருக்கும்

விரக்தி அடைந்த கூட்டம்

குடிசை வாசிகள்.

Monday, May 31, 2021

மரம்

 இறைவனின் அருட்கொடை - உலக

இயக்கத்தின் பெரும்படை

நிழல்தரும் நெடுமாடம் - பலரின்

பசியாற்றும் அட்சயபாத்திரம்


மழையின் உண்மைகாதலன் - மண்

அரிப்பைத் தடுக்கும் பாதுகாவலன்

கண்ணிற்குக் குளிர்ச்சிதரும் சாதனம் - ஊற்றெடுக்கும்

கவிதை பிறப்புக்கு நீயே காரணம்


மழலைகளின் விளையாட்டு ராட்டினம் - பல

உயிர்களுக்கு நீயே புகலிடம்

வெயில் வாட்டி வதைக்கும்போதே - வருகிறது

புத்திக்கு உந்தன் ஞாபகம்


நீ உள்ள வரைதான் உலக இயக்கம் - இனி

நீரின்றியே எப்படி மனிதம் தழைக்கும் 

தாயினும் சிறந்தது உனதன்பு - தவறு

செய்வோர்க்கும் நன்மையளிப்பதே உனதியல்பு


வீழ்த்தினாலும் வீழ்ந்திடாத நீ - வீறுகொண்டு

எழுகின்ற இயற்கை சேவகன்

சிலர் மரமானதால் மறந்தார் - நீயோ

மரமானாலும் அறமாய் வாழ்கிறாய்.


 

குடிசை வாசிகள்

  நவீன மயமாக்கப்பட்ட நகர வீதியின் பூர்வகுடிகள் மழை பெய்து விட்டால் வானத்தின் கருமேகங்கள் எல்லாம் வந்துவிடும் வீதிகளில் ...